உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக, அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிரமாகக் களம் காண்கின்றன.
அத்துடன் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி, அசாதுதீன் ஒவைசி தலைமையில் ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன. தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் பாஜகவுக்கு அகிலேஷ் யாதவ் பெரும் சவாலாக இருப்பார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உத்தரப் பிரதேச தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அவர், பிரதான நோக்கம் என்பது பாஜகவை தோற்கடிப்பதே. எனவே, மதச்சார்பற்ற கட்சிகளை இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக அணிதிரட்டும் முயற்சியில் இடதுசாரிகள் செயல்படுவார்கள் என யெச்சூரி கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் வெளியாகவுள்ளன.
இதையும் படிங்க: 'ஆளுநர்கள் ஒற்றர்களாக செயல்படுகிறார்கள்'- நாராயண சாமி குற்றச்சாட்டு!