டெல்லி: காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு கட்டிப்பிடிப்பு தினமாக கொண்டாடுவோம் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் அழைப்பு விடுத்திருந்தது. இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திரும்பப் பெறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பிப்.14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் காதலன், காதலி, கணவன், மனைவி மட்டுமல்லாமல் மனதுக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் தங்களது அன்பை பரிமாறிக்கொள்வது வழக்கம். இந்த பிப்ரவரி 14ஆம் தேதியை பசு கட்டிப்பிடிப்பு தினமாக கொண்டாடுவோம் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் நேற்று (பிப்.9) அறிவிப்பு வெளியிட்டது. அதில், இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு பசுக்களாகும்.
இவைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பல்லுயிர் பெருக்கத்தை பிரதிபலிக்கிறது. பசுக்கள் "காமதேனு" மற்றும் கோமாதா என்று அழைக்கப்படுகிறது. தாய் போல மனிதகுலத்திற்கு செல்வத்தை வழங்குவதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. ஆகவே, தாயின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு பசுப் பிரியர்கள் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு கட்டிப்பிடிப்பு தினமாக கொண்டாடலாம் என்று குறிப்பிடப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு பல்வேறு விமர்சனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின. குறிப்பாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. அந்த வகையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் சாவந்த், இந்த பசு கட்டிப்பிடிப்பு தினம் கோவா, வடகிழக்கு மாநிலங்களுக்குப் பொருந்துமா.? மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பசுக்களை கட்டி அணைப்பாரா? என்று கேள்வி எழுப்பினார்.
அதேபோல மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில், "இந்தியாவில் 'மகிழ்ச்சி பொங்க' இரண்டு வழிமுறைகளை ஒன்றிய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதானியை மோடி அணைப்பார். மக்கள் பசுவை அணைக்க வேண்டும். இதுவல்லவோ அரசு" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் பசு கட்டிப்பிடிப்பு தின அறிவிப்பை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற்றது.
இதையும் படிங்க: ஒருகாலத்தில் உத்தரப் பிரதேசம் ஊழல்களுக்கு பெயர்பெற்றது - பிரதமர் மோடி