பெங்களூரு: பாரத் பயோடெக் உருவாக்கிய கோவிட்-19 தடுப்பூசியின் (கோவாக்சின்) மூன்றாம் கட்ட மருத்துவச் சோதனை இன்றுமுதல் (டிச. 02) பெங்களூருவில் உள்ள வைதேகி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் தொடங்கும் என்று அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
"ஹைதராபாத்தைத் தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் உருவாக்கிய கோவாக்சினுக்கான மூன்றாம் கட்ட சோதனை நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் எங்கள் மருத்துவமனைக்கு அனுமதி அளித்துள்ளது" என்று வைதேகி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மைய அலுவலர் கே. ரவி பாபு தெரிவித்துள்ளார்.
கிளின்ட்ராக் இன்டர்நேஷனல் லிமிடெட் மருத்துவமனையில் சுமார் ஆயிரம் தன்னார்வலர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படும். இந்தத் தடுப்பூசி பரிசோதனை இரண்டு கட்டங்களாகச் செய்யப்படுகிறது.
இன்று (டிச. 02) முதற்கட்டமாகவும், டிசம்பர் 30ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி பரிசோதனையின்போது தன்னார்வலர்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், மருத்துவ ஆலோசனை, கருத்துப் பரிமாற்றம், தொலைபேசி, காணொலி அழைப்பு மூலம் நாள்தோறும் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.
"பரிசோதனைக்குள்படுத்தப்படும் நபர்கள் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என இருபாலினத்தவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பரிசோதனைக்குள்படுத்தப்படும் நபருக்கு நரம்பியல் பிரச்சினைகள் ஏதேனும் உள்ளனவா, நோய் எதிர்ப்புச் சக்தித் தன்மை கொண்டவரா என்பன உள்ளிட்டவற்றை சோதித்து தடுப்பூசி போடப்படுகிறது.
கரோனா பரிசோதனை தொடங்கிய பின்னர், பயோடெக்கின் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் குழுவுடன் கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் ஆலோசனை நடத்துவார்" என கே. ரவி பாபு கூறினார்.
இதையும் படிங்க: 'குட் பட் லேட்'- விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசை விளாசிய அசோக் கெலாட்!