டெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியான கோவாக்சின் தற்போது குழந்தைகள், பெரியோருக்கான உலகளாவிய தடுப்பூசியாக விளங்குவதாக ஹைதராபாத்தில் இயங்கும் அதன் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம், "குழந்தை, பெரியோருக்கு உலகளாவிய தடுப்பூசியாக இருக்கிறது கோவாக்சின். கரோனாவுக்கு எதிரான உலகளாவிய தடுப்பூசி என்ற எங்களது இலக்குகள் எட்டப்பட்டுள்ளன. உரிமத்திற்கான அனைத்துத் தயாரிப்பு மேம்பாட்டுப் பணிகளும் நிறைவடைந்துள்ளன" எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக பாரத் பயோடெக் நிறுவனம், கோவிட் தடுப்பூசியான கோவாக்சின் டெல்டா, ஒமைக்ரான் வகையான வைரஸ்களுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுகிறது எனக் கூறியது.
மேலும் அந்நிறுவனம் ஒரு அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடுகிறது...
- எமோரி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளின்படி, கோவாக்சின் இரண்டு தவணைகளைச் செலுத்திக்கொண்ட நபர், கோவாக்சின் (BBV152) பூஸ்டர் டோஸ் பெற்று ஆறு மாதத்திற்குப் பிறகு அந்த மருந்து ஒமைக்ரான், டெல்டா வகை வைரஸ்களுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் ஆல்பா, பீட்டா, ஸெட்டா, கப்பா உள்ளிட்ட வகை வைரஸ்களிலும் கோவாக்சின் சிறப்பான செயல்பாட்டைக் கொண்டுள்ளதாக பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பங்குச்சந்தையில் ஆட்டம் காட்டிய கரடி!