கண்ணூர் (கேரளா): கேரள மாநிலம், கண்ணூரைச் சேர்ந்த நபர் பாஸ்கரன். கடந்த மார்ச் 8ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது சாலையோர கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து காவல் துறையினர் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில், பாஸ்கரன் கவனக்குறைவாக வாகனத்தை இயக்கியதாகவும், ஐபிசி 79ஆவது பிரிவின்கீழ் இது குற்றம் எனக் கூறி காவல் துறையினர் பாஸ்கரனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து, நீதிமன்றம் குற்றத்திற்கு அபராதம் விதித்து, அபராதத்தொகையை நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ செலுத்துமாறு பாஸ்கரனின் குடும்பத்தாருக்கு உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் நோட்டீஸ் அதிர்ச்சியளிப்பதாகவும், வேதனை தருவதாகவும் உள்ளது என உயிரிழந்த பாஸ்கரனின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "பாஸ்கரன் உயிரிழந்த அந்த கால்வாயினை சுற்றிலும் வேலி அமைக்காமல் இருந்துள்ளது. மேலும், அங்கு எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கப்படவில்லை. காவல் துறையினர் முதலில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் உரிய விசாரணை நடத்தவில்லை, வழக்கை முடிக்க காவல் துறையினர் முயற்சித்தனர். இதுகுறித்து டிஜிபி மற்றும் முதலமைச்சரிடம் மனு அளித்தோம். தற்போது நீதிமன்ற நோட்டீஸ் வந்துள்ளது" என்று கூறினர்.
பாஸ்கரன் உயிரிழந்ததையடுத்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொதுப்பணித்துறையினர் கால்வாய்க்கு வேலி அமைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆந்திராவில் சோகம்- ஆட்டோ மீது மின்கம்பி விழுந்ததில் 5 பேர் உடல் கருகி பலி