டெல்லி: அமராவதி மக்களவை உறுப்பினர் நவ்னீத் கவுர் ராணாவுக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழை மும்பை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) ரத்து செய்தது.
மகாராஷ்டிராவின் அமராவதி தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் நவ்னீத் கவுர் ராணா. இவர் போலியான ஆவணங்களை கொடுத்து சாதி சான்றிதழ் பெற்றதாக குற்றஞ்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்றம், கவுர் சாதி சான்றிதழை ரத்து செய்ததுடன், இது போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பெறப்பட்டதாகவும் கூறியது. மேலும், ஆறு வாரங்களுக்குள் கவுர் சரணடையுமாறும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை நீதிபதிகள் ஆர் டி தனுகா மற்றும் வி ஜி பிஷ்ட் ஆகியோர் வழங்கினர். கவுர், பட்டியல் சாதி சான்றிதழ் பெறுவதற்காக மோச்சி என்ற சாதியை சேர்ந்தவர் என்று போலியான ஆவணங்கள் அளித்துள்ளார்.
இந்தத் தீர்ப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கவுர், “இந்த நாட்டின் குடிமகளாக உத்தரவை நான் மதிக்கிறேன். இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வேன். எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
மேலும், “தாம் சிவசேனாவுக்கு எதிராக 10 ஆண்டுகளாக போராடிவருகிறேன்” என்றும் கூறினார். கவுர் 2019ஆம் ஆண்டு அமராவதி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வென்றார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: பிரான்ஸ் அதிபரை அறைந்த சம்பவம்: இருவர் கைது!