கேரள மாநிலத்தின், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள புழக்கல் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்தபோது கரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி, அதே மருத்துவமனையில் உள்ள கரோனா தனிமை வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் கணையம் எனப்படும் பான்கிரஸ் வயிற்று வலியினால் அவதிப்பட்டுவந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இவர் நேற்று இரவு மருத்துவமனையின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கரோனா நோயாளி கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள், காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
கணையம் எனப்படும் பான்கிரஸ் வயிற்று வலியினால் அவதிப்பட்டுவந்த அவருக்கு சரியான மருத்துவம் வழங்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் இந்த முடிவை எடுத்திருக்காலம் என தனிமை வார்டில் உள்ள ஒரு பணியாளர் கூறினார். இருப்பினும் முறையான விசாரணைக்கு பின்னரே தற்கொலைக்கான காரணத்தை அறிய முடியும் எனக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
மருத்துவமனை கழிப்பறையிலேயே கரோனா பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த ஜூன் மாதம் கரோனா தனிமை வார்டில் சிகிச்சைப் பெற்றுவந்த இரண்டு நோயாளிகள் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.