இந்தியாவின் பல மாநிலங்களில் கரோனா இரண்டாம் அலை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு ஊரடங்கு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கரோனா மூன்றாம் அலை குறித்து பல கருத்துகள் தற்போது மக்கள் மத்தியில் பரவிக்கொண்டிருக்கின்றன. இரண்டாம் அலைக்குப் பின்னரும் மக்கள் முகக்கவசம் அணிவதில் அலட்சியம்காட்டுவதும், தடுப்பூசி போடுவதில் சுணக்கம் காட்டிவருவதும் மூன்றாவது அலைக்கு வழிவகுக்கும் என்று பல்வேறு மருத்துவ ஆய்வுகளும் கூறிவருகின்றன.
விஞ்ஞானிகள் கருத்து
கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு எதிர்ப்புச் சக்தி எவ்வளவு நாள் நீடிக்கிறது, தடுப்பூசித் திட்டம் எவ்வளவு வேகமாகச் செயல்படுகிறது என்பதை வைத்தே மூன்றாம் அலை பாதிப்பு நிர்ணயிக்கப்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மூன்றாம் அலை குறித்த பேச்சுகள் வெளிவரத் தொடங்கியபோது, இந்த அலை குழந்தைகளைதான் அதிகமாகப் பாதிக்கும் என்று கூறப்பட்டுவந்தது. ஆனால், உலக சுகாதார அமைப்பும்-எய்ம்ஸ் மருத்துவமனையும் இணைந்து நடத்திய புதிய ஆய்வில் கரோனா மூன்றாம் அலையால் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
வழக்கமான எச்சரிக்கை
தற்போது இந்திய மருத்துவக் கூட்டமைப்பு, தொடர்ந்து அலட்சியப்போக்குடன் கூட்டம் சேர்ந்தால், மூன்றாவது அலையைத் தடுக்க முடியாது. உலக நாடுகளின் அனுபவம் சொல்லும் செய்தியும் இதுதான் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கையே விடுத்துள்ளது.
இப்படி, மூன்றாம் அலை குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இருக்க, மக்கள் வதந்திகளை நம்பாமல் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினாலேயே மூன்றாம் அலை குறித்த கவலைகள் தேவையில்லை என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க: ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பியோர் 3104 நபர்கள்