உலகப் பெருந்தொற்றான கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து போராடிவரும் நிலையில், இந்தியா தனது பங்களிப்பாக பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகம் மேற்கொண்டுவருகிறது. இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் அஸ்ட்ரா செனேக்கா தடுப்பூசியும், பாரத் பயோட்டெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், கரீபியன் தீவுகளைச் சேர்ந்த நாடான டொமினிக்கன் ரிபப்ளிக் நாட்டிற்கு 20,000 அஸ்ட்ரா செனேக்கா தடுப்பூசியை இந்தியா அனுப்பிவைத்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில் தங்கள் நாட்டிற்கு உதவி செய்த இந்தியாவுக்கு நன்றி என டொமினிக்கன் ரிபப்ளிக் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ராபர்டோ அல்வரேஸ் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியா 2.29 கோடி தடுப்பூசி டோஸ்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. அடுத்த வாரங்களில் ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளுக்கும் தடுப்பூசி அனுப்பிவைக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்ஸவா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பைசர் தடுப்பூசிக்கு ஜப்பான் ஒப்புதல்