பனாஜி : எல்கர் பரிஷத் மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, உடல் நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி திங்கள்கிழமை (ஜூலை 6) உயிரிழந்தார்.
மனித உரிமை ஆர்வலரான பாதிரியார் ஸ்டேன் சுவாமி மரணத்துக்கு கோவா மாநில காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பனாஜியில் உள்ள ஆசாத் மைதானத்தில் இன்று (ஜூலை 6) காலை 11 மணிக்கு பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் மரணத்துக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
பாதிரியார் ஸ்டேன் சுவாமி எல்கர் பிரிஷத் வழக்கில் உபா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். நவிமும்பையில் உள்ள தாலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு பல்வேறு உடல் நலப் பிரச்னைகள் ஏற்பட்டன.
இதையடுத்து மாநில அரசின் மும்பை ஜேஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் 1.25 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அவரது இறப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் மரணத்தை கோவா மாநில காங்கிரஸ் கட்சி, “காவல் படுகொலை (custodial killing)” என விமர்சித்துள்ளது. தள்ளாத வயதிலும் காலில் சங்கிலி பூட்டிய நிலையில் மருத்துவமனை படுக்கையில் பாதிரியார் ஸ்டேன் சுவாமி சிசிக்சை பெற்ற படங்கள் வெளியாகி கல் நெஞ்சம் கொண்டோரையும் கலங்கச் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பழங்குடியின செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி காலமானார்