ருத்ரபூர்: உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அங்குப் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நரேந்திர பரப்புரை மேற்கொண்டுவருகிறார். அந்த வகையில் இன்று (பிப்ரவரி 12) அவர் ருத்ரபூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "இந்தியாவும் ஒன்றே, இந்த நாடும் ஒன்றே... காங்கிரஸ் சொல்கிறது இது நாடு அல்ல என்று. இந்தியாவை ஒரு நாடாகக் கருத காங்கிரஸ் தயாராக இல்லை. உத்தரகாண்ட் தேவபூமியின் தெய்வீகத்தை பாஜக பாதுகாக்கும்" என்றார்.
சான்றிதழ்களில் கிழக்குப் பாகிஸ்தான் நீக்கம் - பாராட்டு
நாட்டின் முதல் தலைமைத் தளபதி மறைந்த பிபின் ராவத்தை காங்கிரஸ் தவறாகப் பேசியது, இதனை ஏற்றுக்கொள்வீர்களா? எனக் கூட்டத்தினரை நோக்கி கேட்டார். தடுப்பூசி பற்றி மக்கள் மனத்தில் காங்கிரஸ் அச்சத்தை உருவாக்கியுள்ளதாக மோடி குற்றஞ்சாட்டினார்.
உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியைப் பாராட்டும்விதமாகப் பேசிய நரேந்திர மோடி, உத்தரகாண்ட்டில் வசிக்கும் குடியமர்த்தப்பட்ட வங்காளிகளின் சான்றிதழ்களில் 'கிழக்குப் பாகிஸ்தான்' எனக் குறிப்பிடுவதை நீக்கி பாராட்டத்தக்க நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டது என்றார்.
"நாம் இங்கு நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளோம். தேசிய ரோப் வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின்படி, ரோப் வழி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள் திறக்கப்படும்" என மோடி வாக்குறுதி அளித்தார்.
இதையும் படிங்க: காங்கிரசின் கொள்கை பிரிப்பதும் கொள்ளையடிப்பதுமே - நரேந்திர மோடி விமர்சனம்