காங்கிரஸ் எம்.பி ராஜீவ் சாதவ்வுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி கரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, அவருக்கு புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர், கரோனாவிலிருந்து குணமடைந்த அவருக்கு, வேறு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைய, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. அவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், " என் நண்பர் ராஜீவ் சாதவின் இழப்பு வருத்தம் அளிக்கிறது. அதிக ஆற்றல் கொண்ட, காங்கிரஸ் கொள்கைகளுடன் பிணைந்த அரசியல் தலைவர் ராஜீவ் சாதவ். இவரின் மறைவு நமக்குப் பெரிய இழப்பு. அவரின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், " பொது வாழ்க்கையில் என்னுடைய ஆரம்பக் காலத்திலிருந்து தற்போது வரை கூடவே பயணித்த நபரை இழந்துவிட்டேன். எளிமை, புன்னகை, விஸ்வாசம், நட்பு ஆகியவற்றின் மூலம் எப்போதும் நினைவில் இருப்பீர்கள். குட் பை நண்பா! எனத் தெரிவித்துள்ளார்.
ஜோதிமணி எம்.பி தனது ட்விட்டரில், " இதை என்னால் நம்ப முடியவில்லை. உறுதியான என் அன்பு சகோதரர் இனி இல்லை. நம்பகமான விஸ்வாசமான கட்சி லெப்டினெண்ட்டை இழந்துவிட்டோம். அவரது மனைவி பிரண்யா ஜி & குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கல். நெருக்கடியின் இந்த நேரத்தில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். குட்-பை எனது அன்பு சகோதரரே எனப் பதிவிட்டுள்ளார்.