ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அசோக் கெலாட் முதலமைச்சராக இருக்கிறார். கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சி அமைந்தது முதலே அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அதைத் தொடர்ந்து, கடந்த 2020ஆம் ஆண்டு சச்சின் பைலட் துணை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, பைலட் கெலாட் அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார்.
கடந்த பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் புகார்கள் தொடர்பாக கெலாட் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என பைலட் குற்றம் சாட்டுகிறார். இந்த ஊழல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அண்மையில் சச்சின் பைலட் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மேற்கொண்டார். பாஜக முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவாக அசோக் கெலாட் செயல்படுவதாக, சச்சின் பைலட் அண்மையில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இதைத் தொடர்ந்து ஊழலுக்கு எதிராக ஐந்து நாட்கள் நடைபயணத்தை சச்சின் பைலட் தொடங்கியுள்ளார். அஜ்மீரில் இருந்து ஜெய்ப்பூர் வரையில் 125 கிலோ மீட்டர் நடைபயணத்தை பைலட் நேற்று(மே.11) தொடங்கினார். தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கொடியை ஏந்தியபடி யாத்திரை மேற்கொண்டார். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று, அஜ்மீர் மாவட்டத்தின் கிஷன்கரில் உள்ள சுங்கச்சாவடியிலிருந்து பைலட் தனது நடைபயணத்தை தொடங்கினார்.
அப்போது, தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பைலட், "ராஜஸ்தானில் ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், ராஜஸ்தான் அரசு பணியாளர் தேர்வு ஆணைய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மாற்ற வேண்டியுள்ளது. எனது போராட்டம் மக்களுக்கானது, மக்கள் எனக்கு ஆசி வழங்குவார்கள்" என்று கூறினார்.
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலைக் கருத்தில் கொண்டே பைலட் இந்த யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் எனக் கூறப்படுகிறது.