பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில், கடந்த 1988ஆம் ஆண்டு, காங்கிரஸ் பிரமுகர் நவ்ஜோத் சிங் சித்துவும், அவரது நண்பரும், குர்மான் சிங் (65) என்பவருடன் கார் பார்க்கிங் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது குர்மான் சிங்கை காரிலிருந்து வெளியே இழுத்து சித்து தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த குர்மான் சிங், பின்னர் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2018-ல் நவ்ஜோத் சிங் சித்து குற்றமற்றவர் என்று பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து குர்மான் சிங் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில், சித்து அடித்ததால்தான் குர்மான் சிங் இறந்தார் என்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லாததால், நீதிமன்றம் சித்துவை விடுவித்தது. அதேநேரம் மூத்த குடிமகனை தாக்கியதற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குர்மான் சிங்கின் குடும்பத்தினர் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். சித்துவுக்கு சற்றே கடினமான தண்டனையாவது வழங்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்தனர். இந்த சீராய்வு மனுவை நேற்று(மே 19) விசாரித்த உச்ச நீதிமன்றம், சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டது. உடல்நலக் குறைபாடு இருப்பதால் சரணடைய கால அவகாசம் வேண்டும் எனக்கோரி சித்து சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து, நவ்ஜோத்சிங் சித்து இன்று பாட்டியாலா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.