ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக தற்போது சோனியா காந்தி பதவிவகித்து வருகிறார். இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு அந்த பதவி வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் பலவீனமாக உள்ளதால் எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும் என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக சரத்பவார் நியமிக்கப்பட்டால் மகிழ்ச்சி அடைவோம். ஆனால், அவர் அதை மறுத்துவிட்டதாக தெரிகிறது. இந்த ஆலோசனை அதிகாரப்பூர்வமாகும் பட்சத்தில் நாங்கள் அதனை ஆதரிப்போம். காங்கிரஸ் பலவீனமாக உள்ளதால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்த வேண்டும்.
காங்கிரஸ் மிகப்பெரிய கட்சி. எனவே, இதுபோன்ற முடிவுகளை எடுப்பது அவ்வளவு எளிதல்ல. எப்படி மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி அமைக்கப்பட்டதோ அதேபோல் தேசிய அளவில் ஒரு கூட்டணியை அமைக்கமுடியுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்றார். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனா அங்கம் வகித்துவந்தது குறிப்பிடத்தக்கது.