டெல்லி : நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் கூட்டத்தை ஜனவரி 8ஆம் தேதி கூட்டியுள்ளது.
முன்னதாக, இது ஒரு நேரடி சந்திப்பாக திட்டமிடப்பட்டது, ஆனால் கோவிட் -19 பரவல் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, கட்சி அதை மெய்நிகராக (காணொலி வாயிலாக) நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்குகிறது.
இது தவிர, பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸின் போராட்டத் திட்டமான 'ஜன் ஜாக்ரன் அபியான்' மற்றும் பயிற்சி முகாம்களின் முன்னேற்றம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
காங்கிரஸின் உறுப்பினர் சேர்க்கை தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது, அதன் செயல்முறை மார்ச் 31ஆம் தேதிக்குள் நிறைவடையும். இது தவிர, டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தையும் காங்கிரஸ் நடத்தி வருகிறது.
காங்கிரஸ் நவம்பர் 14 அன்று 'ஜன் ஜாக்ரன் அபியான்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நரேந்திர மோடி அரசாங்கத்தின் பொருளாதாரத்தின் “தவறான நிர்வாகத்தை” முன்னிலைப்படுத்துவதையும், பணவீக்கத்தை எதிர்கொள்வதில் மத்திய அரசின் செயலற்ற தன்மையை மக்களுக்கு உணர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க : நாட்டின் பன்முகத் தன்மைக்கு ஆபத்து - சோனியா காந்தி கவலை