டெல்லி: கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் முடக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அவையில் சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதனிடையே, ஆளும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பின்னர், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் கடந்த ஆகஸ்ட் 8 அன்று தொடங்கியது. இதில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மீண்டும் எம்பியாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூட்டத்தொடரில் கலந்து கொண்டு, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசினார். இதனையடுத்து, நேற்று (ஆகஸ்ட் 10) நடைபெற்ற விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்கள் பேசினர்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். அப்போது, திமுக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், வெளிநடப்பும் செய்தனர். பின்னர், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, மக்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிரதமர் மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விளக்கம் அளிக்கும்போது அடிக்கடி குறுக்கிட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டது. இதற்கான தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, மக்களவை காங்கிரஸ் எம்பிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக கிடைத்த தகவலின்படி, இன்று (ஆகஸ்ட் 11) காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிய முடிகிறது.
இந்த கூட்டத்திற்கு நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இது குறித்து காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், “நான் பிரதமர் மோடியை அவமதிக்கவில்லை. பிரதமர் எல்லாவற்றையும் பற்றி பேசுகிறார். ஆனால், மணிப்பூர் விவகாரத்தைத் தவிர. அவர் ‘நிரவ்’- ஆக (Nirav) அமர்ந்திருக்கிறார். நிரவ் என்றால் அமைதி என்று பொருள்.
பிரதமரை அவமதிப்பது என்னுடைய நோக்கம் அல்ல. பிரதமரும் தன்னை அவமதித்தாக உணரவில்லை. ஆனால், அவரது அமைச்சரவைதான் நான் பிரதமரை அவமதித்தாக உணர்ந்து உள்ளார்கள். எனவேதான், எனக்கு எதிராக இந்த நடவடிக்கை தாக்கல் செய்யப்பட்டது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுகவினரிடம் கேளுங்கள் கச்சத்தீவை தாரை வார்த்தது யாரென்று... எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!