மும்பை: பிரபல கிரிக்கெட் வீரர் சச்சினின் உதவியாளர் ஒருவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பான மனுவில், ஆன்லைனில் செயல்படும் மருந்து விற்பனை நிறுவனம், அனுமதியின்றி சச்சின் டெண்டுல்கரின் பெயரை பயன்படுத்தி விற்பனையில் ஈடுபடுகிறது. சச்சினின் புகைப்படம், குரல் ஆகியவற்றைப் பயன்படுத்தி அந்நிறுவனம் வர்த்தகம் செய்து வருகிறது. sachinhealth.in என்ற பெயரில் செயல்படும் அந்த நிறுவனம், பல்வேறு மருந்து பொருட்களை விற்பனை செய்கிறது. டெண்டுல்கரின் பெயரை முறைகேடாகப் பயன்படுத்தி செயல்படும் தனியார் நிறுவனம் மற்றும் போலி விளம்பரங்களை வெளியிட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
முன்னதாக சச்சின் டெண்டுல்கர் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "எனக்கு தொடர்பில்லாத தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விற்பனை செய்வதற்காக, என்னிடம் அனுமதி பெறாமல் சில முயற்சிகள் நடக்கின்றன. அங்கீகரிக்கப்படாத பொருட்கள் மற்றும் சேவைகளை ஆன்லைனில் மக்களை வாங்க வைத்து ஏமாற்றும் செயல் இது. இதைப்பற்றி ஏற்கனவே சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பஞ்சாப், ஒடிசா இடைத் தேர்தல் முடிவுகள் - ஆளும்கட்சிகள் அபார வெற்றி!