ஜம்மு-காஷ்மீர் பயங்கராவாத தாக்குதலில் மூன்றாம் தலைமுறை ராணுவ வீரர் கர்னல் மன்பிரீத் சிங் மரணம்! - மன்பிரீத் சிங் உயிரிழப்பு
colonel manpreet singh: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் கர்னல் மன்பிரீத் சிங் உயிரிழந்தார். 19 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் படையில் இருந்த அவரது அர்ப்பணிப்பும் துணிச்சலும் நமது ஆயுதப் படைகளின் தன்னலமற்ற தன்மையையும் தைரியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.
Published : Sep 14, 2023, 3:58 PM IST
ஜம்மு காஷ்மீர்: அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. காடோல் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே நேற்று காலை முதல் துப்பாக்கிச் சூடு நடந்து வந்தது. இந்த பயங்கரவாதிகளுக்கு எதிரான மோதலில் இந்திய ராணுவ வீரர் கர்னல் மன்பிரீத் சிங் உள்பட மூவர் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.
19 ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் நான்கு மாதங்கள் உள்ள நிலையில், இந்த பயங்கரவாதிகளுடனான கடுமையான மோதலில் மன்பிரீத் சிங் உயிரிழந்தார். அவரது இறப்புச் செய்தி அவரது சொந்த ஊரான பஞ்ச்குலா மற்றும் பஞ்சாபின் மொஹாலியில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது உடல், மொஹாலி மாவட்டத்தில் உள்ள அவரது மூதாதையர் கிராமமான பன்ஜோரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டவுள்ளது.
கர்னல் மன்பிரீத் சிங்கின் தாத்தா ஷீத்தல் சிங், அவரது தந்தை மறைந்த லக்மீர் சிங் மற்றும் அவரது மாமா ரஞ்சித் சிங் ஆகிய அனைவரும் இந்திய ராணுவத்தில் மரியாதையுடன் பணியாற்றியவர்கள். அந்த வரிசையில் தான் கர்னல் மன்பிரீத் சிங் தனது ராணுவ பணியை பற்றுடன் செய்து வந்தார். மன்பிரீத் சிங்கின் தந்தை, ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார்.
தேசத்தின் பாதுகாவலரான கர்னல் மன்பிரீத் சிங், அவரது மனைவி ஜக்மீத் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் உட்பட அவரது குடும்பத்தை விட்டுச் சென்றார். முன்னதாக, கர்னல் மன்பிரீத் சிங்கிற்கு காயங்கள் மட்டும் ஏற்பட்டதாக குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னரே அவரது இறப்பு குறித்த செய்தி, குடும்பத்தினருக்கு தெரியவந்தது.
கர்னல் மன்பிரீத் சிங், 19 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் (ஆர்ஆர்) பட்டாலியனின் தலைமையில், பயங்கரவாதத்திற்கு எதிரான இடைவிடாத போரில் தனது படைகளை வழிநடத்தும் சவாலான பணியை ஏற்றார். துரதிர்ஷ்டவசமாக, அனந்த்நாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது இந்த வீரம் மிக்க அதிகாரியின் உயிர் பிரிந்தது. அவர் ராஷ்டிரிய ரைஃபிள்ஸுடன் தனது பதவிக்காலத்தை முடிக்க இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே இருப்பது என்பது குறுப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலானது இரவில் மட்டுமே தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் கர்னல் மன்பிரீத் சிங், பஞ்ச்குலாவைச் சேர்ந்த தனது குழுவை மீண்டும் பயங்கராவதிகள் இருக்கும் இடத்தை நோக்கி அழைத்துச் சென்றார். இந்த தீவிர தேடுதல் நடவடிக்கையின் போதுதான், கர்னல் சிங் மற்றும் அவரது குழுவினருடன் பயங்கரவாதிகள் மோதலில் ஈடுபட்டனர்.
துரதிர்ஷ்டவசமாக, கர்னல் மன்பிரீத் சிங் மட்டுமல்ல, ஆஷிஷ் தௌஞ்சக் மற்றும் டிஎஸ்பி ஹுமாயுன் பட் ஆகியோரும் உயிரிழந்தனர். கர்னல் மன்பிரீத் சிங்கின் நினைவு இந்தியாவின் மாவீரர்களின் வரலாற்றில் என்றென்றும் பொறிக்கப்படும், இது தாய்நாட்டின் மீது அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் அடையாளமாகும் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சூடு; பாதுகாப்பு படைவீரர்கள் காயம்!