பெங்களூரு: கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த சில நாள்களுக்கு முன்னர், மத அடையாளங்களை வெளிப்படுத்தும்விதமாக ஹிஜாப், காவி சால்வை, மதக் கொடிகள் உள்ளிட்டவற்றை அணிந்தோ, கையில் ஏந்தியோ கல்வி மையங்களுக்குள் (பள்ளி, கல்லூரிகள்) வரும் மாணவர்களை அனுமதிக்கக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலத்தின் மிகவும் பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காவல் துறையினரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
ஹிஜாபுக்குத் தடை: மாணவிகள் போராட்டம்
மேலும், கல்வி மைய வளாகங்களுக்குள்பட்ட பகுதிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரிப் பணியாளர்கள், மத இயக்கங்களைச் சார்ந்தோர் என நடமாடத் தடைவிதிக்கப்பட்டது. இன்று கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற தடை உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்துவந்த மாணவியர் வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில், ஹுப்பள்ளியில் உள்ள ஜே.சி. சிட்டிஸ் பெண்கள் கல்லூரியின் முன்பு வகுப்புகளுக்குள் அனுமதிக்கக் கோரி ஹிஜாப் அணிந்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நிலைமை தீவிரமடைவதைத் தவிர்க்கும்வகையில் முன்னெச்சரிக்கையாக கல்லூரி நிர்வாகம் இன்று விடுமுறை அறிவித்து வாயில் கேட்டை மூடியது.
இதேபோல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவை மீறி மாணவிகள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும்விதமாக ஹிஜாப் அணிந்துவந்து கல்லூரிகளுக்குள் அனுமதிக்குமாறு நிர்வாகத்தை வற்புறுத்தினர். முக்கியமாக கொப்பல், பெலகாவி, விஜயபுரா, சிக்கமக்களூரு, சிவமொக்கா ஆகிய இடங்களில் இது தொடர்பான போராட்டம் நடைபெற்றது.
தொடரும் வழக்கு விசாரணை
அதேசமயம், ஹிஜாப் தடை தொடர்பான வழக்கு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று மதியம் 2.30 மணிக்கு நடைபெற்றது. தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி தலைமையிலான நீதிபதிகள் கிருஷ்ணா எஸ், தீக்சித், ஜே.எம். காசி ஆகியோர் அடங்கிய அமர்வு மனுதாரரின் இந்த மனுவை நான்காவது நாளாக விசாரித்தது.
இதையும் படிங்க: கிறிஸ்தவர்களுக்கு திமுக என்றும் அரண்: ஸ்டாலினுடன் பேராயர்கள் சந்திப்பு!