கோழிகோடு(கேரளா): கேரள மாநிலம் கோழிக்கோட் மருத்துவக் கல்லூரியில் நடப்பு பருவத்திற்கான எம்பிபிஎஸ் வகுப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டன. எம்பிபிஎஸ் வகுப்புகள் தொடங்கிய முதல் நான்கு நாட்கள் முறையான வருகை பதிவேடு எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து முறையாக அட்மிஷன் பெற்ற 245 மாணவர்களை கொண்டு வருகை பதிவேடு தயாரிக்கப்பட்ட நிலையில், வகுப்பில் மொத்தம் 246 பேர் இருந்ததாக தெரியவந்தது.
இதையடுத்து ஆசிரியர்கள் நடத்திய விசாரணையில், 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், எம்பிபிஎஸ் படிப்புக்கான அட்மிஷனை முறையாக பெறாமல் நான்கு நாட்கள் கல்லூரிக்கு வந்து வகுப்புகளில் கலந்து கொண்டது தெரியவந்தது. வகுப்புக்கு தாமதமாக வந்த மாணவர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டதால், குறிப்பிட்ட மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் 5ஆவது நாளில் வருகை பதிவேடு எடுப்பதை அறிந்து கொண்ட மாணவர் வகுப்புக்கு வரவில்லை என்றும் கோழிக்கோடு மருத்துவ கல்லூரி துணை முதல்வர் தெரிவித்தார்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரில் போலீசார் விசாரித்து வந்தனர். குறிப்பிட்ட மாணவர் போலி ஆவணங்களை வழங்கி கல்லூரியில் சேராததால் மோசடி வழக்கு பதிவு செய்யாமல் விசாரித்து வருவதாகவும், அடுத்தகட்ட தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இஷானின் அதிரடியால் ஆறுதல் வெற்றி கண்ட இந்திய அணி