தன்பாத்: பள்ளிக்கு பொட்டு வைத்து சென்றதால் ஆசிரியர் மாணவியை திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்டம், டெத்துல்மாரி காவல் நிலையப் பகுதியில் உள்ள ஹனுமன்கர்ஹி காலனியில் 17 வயது மாணவி, தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த மாணவி இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி பள்ளிக்கு பொட்டு வைத்துச் சென்று உள்ளார். இதன் காரணமாக, ஆசிரியர் மாணவியை திட்டியதாகவும், அறைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசாரின் விசாரணையில் இறந்த சிறுமியின் பள்ளி சீருடையின் பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்தது தெரிய வந்துள்ளது.
அதை டெத்துல்மாரி காவல்நிலைய காவல் அதிகாரி மீட்டு உள்ளார். ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டு இறந்ததைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டப்பட்ட தனியார் பள்ளிக்கு வெளியே கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசியங்கள் கசியவிட்டதாக புகார்.. மத்திய வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது!
மேலும், மாணவியின் சடலத்துடன் டெத்துல்மாரியில் இருந்து நயா மோர் பகுதி வரை, உள்ள சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாணவியின் இறப்பிற்கு காரணமான பள்ளியின் முதல்வர் மீதும், குற்றம்சுமத்தப்பட்ட ஆசிரியர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க: Rahul Gandhi : "ஆக்ரோஷமாக பிரசாரம் செய்யுங்கள்... காங்கிரசுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது..." ராகுல் காந்தி!
இது குறித்து மாவட்டத் தலைவர், பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குற்றம் சாட்டப்பட்ட பள்ளி ஆசிரியரை உடனடியாகக் கைது செய்யவேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார். மேலும், இது குறித்து டெத்துல்மாரி காவல் நிலைய போலீசார், தனியார் பள்ளியின் முதல்வர் மீதும், தவறு செய்த ஆசிரியர் மீதும் (FIR) எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.
பள்ளிக்குப் பொட்டு வைத்துச் சென்ற மாணவியை தனியார் பள்ளி ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: "மார்கதரசி சிட்பண்ட் ஆர்பிஐ விதிகள் படியே இயங்குகிறது" - ஆந்திர போலீசாரால் சந்தாதாரர்களுக்கு தொல்லை என புகார்!