டெல்லி : நாட்டில் உள்நாட்டு விமான கட்டணங்கள் விரைவில் விலை உயர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விமான டிக்கெட்டுகளின் விலையை உயர்த்துவது குறித்து விமான நிறுவனங்களுடன், மத்திய உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விமான டிக்கெடுகளை விலை உயர்த்துவது குறித்து விமான நிறுவனங்கள் முறையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பட்ஜெட் விமான நிறுவனமான கோ பர்ஸ்ட், கடந்த மே 3ஆம் தேதியில் இருந்து விமான சேவைகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் திவால் நடவடிக்கையில் இறங்கியதை அடுத்து, அந்த விமான நிறுவனத்தின் விமானங்கள் இயங்கி வந்த வழித்தடங்களில் நிலவும் விமான போக்குவரத்து பற்றாக்குறையை சீர் செய்ய மற்ற விமான நிறுவனங்கள் மும்முரம் காட்டி வருகின்றன.
இதனால் விமான டிக்கெட்டுகள் விலை ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க சில விமான நிறுவனங்களை டிக்கெட் விலையை குறைத்ததாகவும், நெருக்கடி நேரங்களில் வரம்பின்றி உச்சபட்ச விலையை அறிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து விமான போக்குவரத்து மற்றும் டிக்கெடுகள் விலையை ஒழுங்குபடுத்தும் விதமாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில், விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறா உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம், விமான கட்டணங்கள் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாகவும், கண்காணிப்பு மற்றும் வசதி நோக்கங்களுக்காக இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரி தெரிவித்து உள்ளார். கோ பர்ஸ்ட் விமான சேவை நிறுத்தப்பட்டு உள்ள வழித்தடங்களில் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்து உள்ள நிலையில், அதை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடந்த வாரம் தெரிவித்து இருந்தார்.
பொதுவாக விமான டிக்கெட்டுகளின் அதிகபட்ச விலை வரம்பு நிர்ணயம் செய்வதில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அதிகாரம் கொண்டு உள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை நடத்தி விமான டிக்கெட்டுகளின் விலை வரம்பை நிர்ணயம் செய்யும். அதேநேரம் இந்த கூட்டத்தில் விமான டிக்கெட்டுகளின் அதிகபட்ச விலை உயர்வு, சில குறிப்பிட்ட வழித் தடங்களில் அபரிவிதமான டிக்கெட் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.
இந்த கூட்டத்தில் தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள், தனியார் விமான நிலைய இயக்குனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு டிக்கெட் விலை நிர்ணயம் தொடர்பான கருத்துகளை தெரிவிப்பர். மத்திய போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சக அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தனியார் விமான நிறுவனங்களுக்கான அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச விமான டிக்கெட்டுகளின் விலை வரம்பை நிர்ணயம் செய்து அறிவிப்பார்கள்.
இதையும் படிங்க : "இந்தியாவில் இரண்டே சித்தாந்தம் தான்... ஒன்று மகாத்மா காந்தி.. மற்றொன்று கோட்சே.." - ராகுல் காந்தி!