ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் உள்ள சோன்வாரில் பாதாமி பாக் ராணுவக் கன்டோன்மென்ட்டுக்கு எதிரே INOXஆல் வடிவமைக்கப்பட்ட திரையரங்கு ஒன்று திறக்கப்பட்டது. இந்த திரையரங்கை ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இன்று(செப்-20) திறந்து வைத்தார். இது டி.பி.தார் என்பவருக்குச் சொந்தமான மல்டிபிளெக்ஸ் தியேட்டர் ஆகும்.
முன்னதாக 1990ஆம் ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்ரீநகர் நகரில் கிட்டத்தட்ட 12 திரையரங்குகள் இருந்தன. ஆனால், அவை பயங்கரவாதம் அப்பகுதியில் தொடங்கியதால் மூடப்பட்டன. பின்னர், அந்தத் திரையரங்குகளின் கட்டடங்கள் பாதுகாப்புப் படையினருக்கான முகாம்களாகவோ அல்லது வணிக வளாகங்களாகவோ மாற்றப்பட்டன.
இருப்பினும் 1998இல் பிராட்வே, நீலம் மற்றும் ரீகல் ஆகிய மூன்று திரையரங்குகள், அப்போதைய பரூக் அப்துல்லா அரசாங்கத்தின்போது மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், ரீகல் என்ற திரையரங்கிற்கு வெளியே ஒரு கையெறி குண்டு வெடித்ததால், அந்த மூன்று தியேட்டர்களும் சிறிது நேரத்தில் மூடப்பட்டன. அப்போதிருந்து, காஷ்மீரில் சினிமா தியேட்டர் எதுவும் திறக்கப்படவில்லை.
கடந்த 2019ஆம் ஆண்டு, இந்திய அரசு 370ஆவது பிரிவு சட்டத்தை ரத்து செய்ததை அடுத்து, காஷ்மீரில் சினிமா மற்றும் திரைப்பட கலாசாரத்தைப்புதுப்பிக்க அரசாங்கம் முயற்சி எடுத்தது. இதனையடுத்து கடந்த வாரம், புல்வாமா மற்றும் ஷோபியானில் இரண்டு திரையரங்குகளை துணை நிலை ஆளுநர் திறந்து வைத்தார். மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திரையரங்குகள் திறக்கப்படும் என்று உறுதியளித்தார்.
புல்வாமா மற்றும் ஷோபியான் திரையரங்குகள் முன்பு அரசாங்கத்துறைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடங்கள் உள்ளன. இருப்பினும் இதுவரை திரையரங்குகளில் டிக்கெட் வழங்கவோ அல்லது வழக்கமான காட்சிகளை திரையிடவோ தொடங்கவில்லை.
ஸ்ரீநகரில் உள்ள INOX திரையரங்கம் வரும் அக்டோபர் 1 முதல் வழக்கமான காட்சிகளைத் தொடங்க உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அயோத்தியில், ஒற்றுமை சிலையை விட உயரமாக அமையவுள்ள ராமர் சிலை