டெல்லி : மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. அதேநேரம், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாமல், உத்தவ் தாக்ரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் அவர் மீண்டும் ஆட்சியை, அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மகாராஷ்டிராவில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா, உள்ளிட்ட எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பாஜக, சிவசேனா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது.
இதற்கு மகா விகாஷ் அகாதி எனப் பெயரிடப்பட்டது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், உத்தவ் தாக்ரே மீதான அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி திரண்டனர். இதனால் ஆட்சிக் கவிழ்ப்பு சூழல் ஏற்பட்டது.
உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து 16 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தனர். இதனால் 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து அப்போதைய முதலமைச்சர் உத்தவ் தாக்ரே உத்தரவிட்டார். இதையடுத்து உத்தவ் தாக்ரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்குமாறு, மகாராஷ்டிரா ஆளுநர் உத்தரவிட்டார்.
பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கருதிய உத்தவ் தாக்ரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா குழு, பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார். இந்நிலையில், 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.
கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணையை நடத்திய நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இன்று (மே. 11) உச்ச நீதிமன்றத்தில் மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு பரிந்துரைப்பதாகக் கூறினர். மேலும் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுவை விரிவாக விசாரிக்கும் எனக் கூறினர்.
மேலும், சபாநாயகர் தகுதி நீக்கம் தொடர்பான மனு விசாரணையில் இருக்கும்போது, எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து அவர் எப்படி முடிவு எடுக்கமுடியும் எனக் கூறிய நீதிபதிகள், 2016ஆம் ஆண்டு நடந்த நாபம்ரெபியா வழக்கின் தீர்ப்பை மேற்கோள்காட்டிய நீதிபதிகள், எம்.எல்.ஏ.க்கள், தகுதி நீக்கம் தொடர்பான சபாநாயகரின் அதிகாரம் குறித்து பெரிய அமர்வு விசாரணை நடத்தும் என்று கூறினர்.
முறையான காரணங்கள் இல்லாமல் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை பெரும்பான்மையை நிரூபிக்கக் கூறிய ஆளுநரின் முடிவு கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்த நீதிபதிகள், உள்கட்சி பூசல் விவகாரத்தில் பெரும்பான்மையை ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிபதிகள் கூறினர்.
மேலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவுக்கு கொறடாவை நியமித்தது தவறு என்றும், சட்டமன்றத்தில் கட்சியாக அங்கம் வகிப்பவர்களுக்கே கொறடா நியமிக்க முடியும் எனவும் நீதிபதிகள் கூறினர். அந்த வகையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவுக்கு கொறடா அமைத்தது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என நீதிபதிகள் கூறினர்.
மேலும், பெரும்பான்மை இழந்ததாகக் கருதி, உத்தவ் தாக்ரே தாமாக முன்வந்து ராஜினாமா செய்து விட்டார் என்றும்; அவர் தாமாக முன்வந்து ராஜினாமா அறிவிக்காமல் இருந்திருந்தால் பழைய நிலையே தொடரும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்பட்சத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு, மீண்டும் உத்தவ் தாக்ரே முதலமைச்சராக நீடித்து இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தவ் தாக்ரே அவசரப்பட்டு முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு மீண்டும் உத்தவ் தாக்ரேவே மகாராஷ்டிர முதலமைச்சராகப் பதவி ஏற்று இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பொற்கோயில் அருகே மீண்டும் குண்டு வெடிப்பு - 5 பேர் கைது!