ராய்ப்பூர் : 90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டப் பேரவைக்கு கடந்த நவம்பர் 7ஆம் தேதி மற்றும் 17ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆட்சியை கைப்பற்ற 46 இடங்கள் பெரும்பான்மைக்கு தேவைப்பட்டதில், பாஜக 54 தொகுதிகளை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்தை நெருங்கிய போதிலும் சத்தீஸ்கருக்கு முதலமைச்சரை தேர்வு செய்வதில் கடும் இழுபறி நீடித்து வந்தது. முதலமைச்சர் ரேசில் விஷ்ணு தியோ சாய், ராமன் சிங், அருண் சாவ், ஒ.பி. சவுத்ரி, ரம்விச்சர் நெதம், சரோஜ் பாண்டே ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியதால் யார் அடுத்த முதலமைச்சர் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் பாஜக இணை பொறுப்பாளரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான மன்சுக் மாண்ட்வியா தலைமையில் சட்டமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், பாஜக சட்டமன்ற குழுவினரால், முதலமைச்சராக பழங்குடியின தலைவர் விஷ்ணு தியோ சாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பழங்குடியின இனத்தை சேர்ந்தவரான விஷ்ணு தியோ சாய், இதற்கு முன் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குன்குரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட விஷ்ணு தியோ சாய், 87 ஆயிரம் வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்த போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 25 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கொண்டார்.
அர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருக்கம், அரசியல் பின்புலம் என பலமிக்கவராக காணப்படும் விஷ்ணு தியோ சாய் இதற்கு முன்னரே பலமுறை எம்.எல்.ஏ.வாகவும், எம்.பியாகவும், மாநில பாஜக தலைவராகவும் பதவி வகித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்குமாறு விஷ்ணு தியோ சாய்க்கு சத்தீஸ்கர் ஆளுநர் பிஷ்வபூசன் ஹரிசந்தன் அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்த விஷ்ணு தியோ சாய், ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனிடையே வரும் டிசம்பர் 12 அல்லது 13ஆம் தேதிகளில் முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் பொறுப்பேற்பார் எனத் தகவல் கூறப்பட்டு உள்ளது. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் 18 லட்சம் வீடுகள் விடுவிப்பு - பதவியேற்புக்கு முன்னரே உத்தரவு! யார் இந்த விஷ்ணு தியோ சாய்?