பெங்களூரு: கடந்த 2019ஆம் ஆண்டு சந்திரயான் 2 திட்டம் நிலவின் தென் துருவத்தில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்டது. இத்திட்டம் தோல்வியடைந்ததாக கூறப்பட்டாலும், உண்மையில் அது தோல்வி இல்லை என்கின்றனர், விஞ்ஞானிகள். அதாவது இதற்கு முன்பு சந்திரனில் தரையிறங்கிய நாடுகள் கூட லேண்டரையும், ஆர்பிட்டரையும் தனித்தனியாகத்தான் அனுப்பியுள்ளன. அதாவது சந்திரனை சுற்றிவரும் அமைப்பு தனியாகவும், தரையிறங்கி ஆய்வு செய்யும் ரோவர் தனியாகவும் அனுப்பப்படும். ஆனால், இவை இரண்டையும் ஒன்றாக அனுப்பும் முயற்சியைத் தான், சந்திரயான் 2-ல் மேற்கொண்டது இஸ்ரோ.
இதில் சந்திரனில் தரையிறங்கும் திட்டம், தோல்வியடைந்தாலும், ஆர்பிட்டர் இன்னமும் நிலவைச் சுற்றி வந்து தகவல்களை நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, வளர்ந்த நாடுகள் செய்யும் செலவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் செலவு பல மடங்கு குறைவு. வளர்ந்த நாடுகள் நிலவில் ரோவரை தரையிறக்க 2,500 கோடி ரூபாய் வரையிலும் செலவிடும் நிலையில், சந்திரயான் 2-க்கு ஆன செலவு சுமார் 900 கோடி ரூபாய். தற்போது சந்திரயான் 3-ல் ஆர்பிட்டர் இல்லாததால் இந்த செலவு மேலும் 300 கோடி ரூபாய் குறைந்து 615 கோடி ரூபாயாக உள்ளது என்கிறது, இஸ்ரோ.
சந்திரயான் 2-இல் சந்தித்த சவால்கள்: சந்திரயான் 2 திட்டத்தில், விக்ரம் லேண்டரை தரையிறக்க முயற்சித்தபோது சுமார் 500 அடி உயரத்தில் இருந்து விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்தது. இதனால் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோவுக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இருப்பினும் வெற்றிகரமாக சுற்றிவரும் ஆர்பிட்டரை சந்திரயான் 3 திட்டத்திற்கு விஞ்ஞானிகள் பயன்படுத்தி வருகின்றனர். விக்ரம் லேண்டர் நிலவின் பரப்பில் மோதியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் நிலவில் ஏற்படுத்திய தாக்கங்களைக் கொண்டு புதிய லேண்டரை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
விக்ரம் லேண்டரைப் பொறுத்தவரையிலும் விநாடிக்கு 1 மீட்டர் வேகத்தில் மோதினால் தாங்கும் அளவுக்கு வடிவமைப்பு இருந்தது. தற்போது இது 3 மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று லேண்டர் தரையிறங்கும் போது ஏற்படும் குளறுபடிகளைக் கண்டறிந்து உடனுக்குடன் சரி செய்ய 2 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சந்திரயான் 2 திட்டத்தில் ஒரு கேமரா மட்டுமே இருந்தது. இதன் மூலம் மேலும் துல்லியமாக லேண்டர் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Punjab Flood: வெள்ளத்தால் சூழப்பட்ட பஞ்சாப் - 11க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு