ஹைதராபாத்: நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், சந்திரயான்-1 திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கடந்த 2019ஆம் ஆண்டு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. இதுவரை யாரும் தொட்டிடாத நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. ஆனால், லேண்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டு, அத்திட்டம் தோல்வியடைந்தது.
இதையடுத்து, பல்வேறு மேம்பாடுகளுடன் சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது. கடந்த முறை லேண்டரில் பிரச்சினை ஏற்பட்டதால், இந்த முறை அதிநவீன தொழில்நுட்பங்களுடன் லேண்டரை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மேம்படுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னர், இந்த விண்கலம் கடந்த 5ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது.
அதன் பிறகு, சுற்றுப்பாதையின் உயரத்தை படிப்படியாக குறைத்து, நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அதன்படி பல்வேறு கட்டங்களாக சுற்றுப்பாதை உயரம் குறைக்கப்பட்டது. கடந்த 17ஆம் தேதி நிலவின் மேற்பரப்பிலிருந்து 153 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும்போது, சந்திரயானின் உந்துவிசை கலனிலிருந்து லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. பின்பு உந்துவிசை கலன், லேண்டர் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக நிலவை ஒட்டிய சுற்றுவட்டப்பாதையில் பயணித்தன.
நேற்று(ஆகஸ்ட் 20) இறுதியாக சுற்றுப்பாதை உயரம் குறைக்கப்பட்டது. இதையடுத்து, நிலவின் மேற்பரப்பிற்கு மிகவும் நெருக்கமான சுற்றுப்பாதைக்கு லேண்டர் கொண்டு செல்லப்பட்டது. அடுத்ததாக லேண்டரின் வேகத்தை குறைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டரை தரையிறக்குவதற்கான பணிகள் வரும் 23ஆம் தேதி மாலை 5.45 மணியளவில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், சந்திரயான்2 விண்கலத்தின் ஆர்பிட்டருடன் தொடர்பு கொண்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை, சந்திரயான்2 விண்கலத்தின் ஆர்பிட்டர் வரவேற்றதாகவும், இரண்டுக்கும் இடையே தகவல் தொடர்பு வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரில் உள்ள கட்டுப்பாட்டுக் குழு (Mission Operations Complex - MOX), லேண்டரை தொடர்பு கொள்வது மேலும் எளிதாக்கி உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-2 விண்கலத்தில் லேண்டர் விழுந்து நொறுங்கியபோதும், அதன் ஆர்பிட்டர் இன்னும் செயல்பாட்டில் உள்ளது. இதனால், சந்திரயான்-3 திட்டத்திற்கு சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரையே இஸ்ரோ பயன்படுத்துகிறது, புதிய ஆர்பிட்டர் அனுப்பப்படவில்லை. சந்திரயான்-2 ஆர்பிட்டரில் இருந்தே இஸ்ரோ தரவுகளைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.