டெல்லி: தலைநகர் டெல்லியில் பணிபுரிந்து வந்த ஐஏஎஸ் தம்பதி சஞ்சீவ் கிர்வார் மற்றும் ரிங்கு துக்கா ஆகியோரை முறையே லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்திற்கு பணியிட மாற்றம் செய்து உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
டெல்லியில் உள்ள தியாகராஜ் மைதானத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் நாள்தோறும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக விளையாட்டு வீரர்களை வழக்கத்திற்கு முன்பாக இரவு 7 மணிக்கு முன்பே ஊழியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.
இதன் பின்னர், ஐஏஎஸ் தம்பதியினர் தங்களது வளர்ப்பு நாயுடன் மைதானத்தில் வாக்கிங் வந்தது தெரியவந்தது. இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையாக எழுந்தது. தியாகராஜ் மைதானத்தில் உள்ள வசதிகளை அலுவலர்கள் தவறாகப் பயன்படுத்தியது குறித்து உள்துறை அமைச்சகம் டெல்லி தலைமை செயலாளரிடம் அறிக்கை அளிக்கும்படி கேட்டது.
தலைமை செயலாளர் அளித்த அறிக்கையின் படி, சஞ்சீவ் கிர்வாரை லடாக்கிற்கும், அவரது மனைவி ரிங்கு துக்காவை அருணாச்சலப் பிரதேசத்திற்கும் பணியிட மாற்றம் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சஞ்சீவ் கிர்வார் டெல்லியில் வருவாய் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து மைதானங்களும் இரவு 10 வரை வீரர்களின் பயிற்சிக்காக திறந்து வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!