டெல்லி : நாட்டில் தக்காளி விலை நாளுக்கு நாள் விண்னை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு உள்பட இரண்டு அமைப்புகளிடம் தக்காளியை கொள்முதல் செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
தக்காளி விலை நாள்தோறும் புது உச்சத்தை தொட்டு வருகிறது. பருவமழை, பற்றாக்குறை, வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் ஒருசேர தக்காளி விலை அதிகரித்து காணப்படுவதால், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடும் கிராக்கி காரணமாக தக்காளி விலை அதிகரித்து காணப்படும் நிலையில், அதனால் கூட ஒருசில இடங்களில் குற்றச் சம்பவங்கள் நடக்கத் தொடங்கி உள்ளன. அண்மையில் கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள வேளாண்மை விளைபொருள் சந்தைக் குழுவில் 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி 2 ஆயிரத்து 200 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அதிகரித்து வரும் தக்காளி விலையை கட்டுப்படுத்த அதனை கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்புகளை தக்காளி கொள்முதல் செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து தக்காளியின் தேவை அதிகம் உள்ள பெருவாரியான மாநிலங்களில் விநியோகிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
சமயலறையின் ராணி என்று அழைக்கப்படும் தக்காளி, நாட்டின் பல்வேறு இடங்களில் சராசரியாக கிலோவுக்கு 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வேளாண் கூட்டுறவு அமைப்புகளை தக்காளி கொள்முதல் செய்யக் கோரிய மத்திய அரசின் உத்தரவு பல்வேறு தரப்பினருக்கும் நிவாரணம் அளிக்கும் என்று கூறப்படுகிறது.
வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை. 14) முதல் டெல்லி தேசிய தலைநகர் மண்டலம் பகுதியில் சில்லரை விற்பனை கடைகள் மூலம் தள்ளுபடி விலையில் தக்காளி விற்க உள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. ஜூலை மாதம் இறுதி வரை குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் சதாரா, நாராயன்கோன், நாசிக் உள்ளிட்ட இடங்களில் இருந்து தக்காளி விநியோகம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாசிக் மாவட்டத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் முதல் தக்காளி விநியோகம் இருக்கும் என்றும் கூடுதலாக நாராயன்கோன், அவுரங்கபாத் பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து அதிகரிக்கும் என கருதப்படுவதால் விலை கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கர்நாடகாவில் 15 கிலோ தக்காளி பெட்டி ரூ.2200க்கு விற்பனை; ஒரு கிலோ ரூ.147