பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. பத்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தாக்குதலுக்கு தேவையான வெடிபொருட்களை அவர்கள் சேகரித்து வருவதாகவும் தகவல் தெரியவந்தது. இதையடுத்து உளவுத்துறையினர் உடனடியாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
உளவுத்துறை அதிகாரிகள், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இணைந்து தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 வாக்கி டாக்கிகள், 7 நாட்டு துப்பாக்கிகள், 42 தோட்டாக்கள், 4 கையெறி குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் 2 சாட்டிலைட் போன்கள், வெடிமருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்கள் சையத் சுஹெல், உமர், ஜானித், முதாசிர் மற்றும் ஜாஹித் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் ஐந்து பேரும் பெங்களூருவில் பெரிய அளவில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பான விசாரணையில், கைதான 5 பேரில் நால்வர், கரோனா காலத்தில் கொலை வழக்கு ஒன்றில் ஆர்த்திநகர் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. ஒருவரை கடத்தி கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறையில் இருந்தபோது, இவர்களுக்கு சில தீவிரவாதிகளுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர்கள் மூலம் குண்டுவெடிப்பு உள்ளிட்ட நாச வேலைகளை செய்ய பயிற்சி பெற்றதாகவும் தெரிகிறது. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, இவர்கள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகவும், வெடிகுண்டு தயாரிக்க தேவையான அனைத்து மூலப் பொருட்களையும் சேகரித்து வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
கைதான ஐந்து பேரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது செல்போன்களையும் பறிமுதல் செய்து சோதித்து வருகிறார்கள். இவர்களுடன் தொடர்பில் உள்ள மேலும் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த ஐந்து பேரையும் கைது செய்ததன் மூலம் பெங்களூரில் நடக்கவிருந்த பெரிய தீவிரவாத சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி.. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு!