லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாகம்பரி மடத்தில் அகில பாரதிய அகார பரிஷத் மடத்தின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி தற்கொலை செய்துகொண்டார். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
தற்கொலைக்கு முன்பு அவர் எழுதிய கடிதத்தில், தனது சீடர்களான ஆனந்த் கிரி உள்ளிட்டவர்கள்தான் தன்னுடைய தற்கொலைக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனந்த் கிரி அந்த குற்றச்சாட்டை மறுத்ததோடு, அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருப்பது அவருடைய கையெழுத்துதானா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர் தற்கொலை செய்திருக்கமுடியாது என்றும் அவர் தற்கொலை குறித்து விசாரணை நடத்தவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே இம்மரணம் தொடர்பாக, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற உத்தரப் பிரதேச அரசு இதனை சிபிஐக்கு மாற்றியது. சிபிஐ அலுவலர்கள் ஐந்து பேர் மஹந்த் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த பிரயாக்ராஜ் மாவட்டத்திற்கு தற்போது சென்றுள்ளனர்.
முதற்கட்டமாக, தற்கொலை தொடர்பான ஆவணங்கள், முதல் தகவல் அறிக்கையின் நகலை சிபிஐ அலுவலர்கள் பெற்றிருக்கின்றனர்.
இதையும் படிங்க: கைம்பெண்ணிடம் கைவரிசை காட்டிய போலி சாமியார் கைது