சென்னை ஐஐடியில் விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான வழக்கில் சிபிஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னையைச் சேர்ந்த விசாரணைக்குழு கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பாத்திமாவின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தினர்.
மாணவி தற்கொலை
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற 19 வயது மாணவி, சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். இவர் 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி அன்று விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடற்கூராய்வு முடிந்து இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர், மாணவியின் செல்போனை ஆராய்ந்தபோது அதில், தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவர்தான் காரணம் என அவரது செல்போனில் ஆங்கிலத்தில் பதிந்து வைத்திருந்தார்.
மேலும் இரண்டு பேராசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்த மாணவி, அவர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் அந்தப் பதிவில் கூறியிருந்தார். அந்த செல்போன் பதிவுகள் மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு முந்தைய நாளான நவம்பர் 8ஆம் தேதி பதிவு செய்யப்பட்டிருந்தது.
மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு நீதி வேண்டி, மாணவர் அமைப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இதையும் படிங்க: 'ஓராண்டு கடந்தும் உறுதியான தகவல் எதுவும் தெரியவில்லை'- தற்கொலை செய்துகொண்ட ஐஐடி மாணவி தந்தை வேதனை!