பிரக்யாராஜ்: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி அமைந்து உள்ளது. இந்த மசூதி வளாக சுவற்றில் இந்துக் கடவுள்களின் உருவங்கள் உள்ளன. இதனால், காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு தான் ஞானவாபி மசூதி கட்டப்பட்டு உள்ளது என இந்துக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இதனிடையே மசூதி வளாக சுவற்றில் உள்ள இந்துக் கடவுள்களை வழிபட அனுமதி வழங்கக் கோரி, கடந்த 2021ஆம் ஆண்டு இந்துப் பெண்கள் சிலர் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மசூதியில் கள ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி கள ஆய்வு நடத்தப்பட்டதில், மசூதியில் சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இதனை மசூதி நிர்வாகம் மறுத்தது. இது தொடர்பான வழக்கின் விசாரணை, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், ஞானவாபி மசூதி வளாகம் முழுவதும் அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி வாரணாசி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. காசி விஸ்வநாதர் கோயில் மீது ஞானவாபி மசூதி கட்டப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக உண்மையைக் கண்டறிய அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மசூதி முழுவதும் ஆய்வு நடத்த அனுமதி அளித்தது. மேலும், ஆய்வறிக்கை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவுப்படி, தொல்லியல்துறையினர் கடந்த 24ஆம் தேதி காலை ஞானவாபி மசூதியில் ஆய்வைத் தொடங்கினர்.
இந்த ஆய்வை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று(ஜூலை 24) விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 26ஆம் தேதி வரை மசூதிக்குள் ஆய்வு நடத்தக் கூடாது என இடைக்கால தடை விதித்தது. மேலும், வரும் 26ஆம் தேதிக்குள் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், இந்துக்கள் தரப்பில் ராக்கி சிங் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்து உள்ளார். அதில், வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி நிர்வாகம் சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தால், தங்களிடமும் விசாரணை நடத்தாமல் அவர்களுக்கு ஆதரவாக எந்த தீர்ப்பு வழங்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.
இதையும் படிங்க: Gyanvapi Case : தொல்லியல் துறை ஆய்வுக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் அதிரடி!