மும்பை: மும்பை மண்டல போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் முன்னாள் இயக்குநர் சமீர் வான்கடேவிற்கு சாதி ஆய்வுக்குழு க்ளீன் சீட் வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை மகாராஷ்டிர அரசின் சமூக நீதித்துறை வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளதாக அலுவலர் ஒருவர் தெரிவித்தார். முன்னதாக அரசு வேலை பெறுவதற்காக போலி சாதிச் சான்றிதழைச் சமர்ப்பித்ததாக வான்கடேவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்) அலுவலரான வான்கடே பிறப்பால் இஸ்லாமியர் அல்ல என்றும், அவர் மஹர் (பட்டியலின) சாதியைச் சேர்ந்தவர் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் நீதித்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான நவாப் மாலிக், வான்கடேவின் சாதி குறித்து சர்ச்சையான கேள்விகளை எழுப்பியிருந்தார். இதனைத்தொடர்ந்து வான்கடேவுக்கு எதிராகப் பிரபல அரசியல் தலைவர்கள் மனோஜ் சன்சாரே, அசோக் காம்ப்ளே, சஞ்சய் காம்ப்ளே ஆகியோரும் வான்கடே மீது புகார் மனு தாக்கல் செய்தனர்.
இதுதொடர்பாக மும்பை மாவட்ட சாதிச்சான்றிதழ் சரிபார்ப்புக்குழு புகார்களை ஆய்வு செய்த கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 12)அன்று உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவின்படி வான்கடேவும் அவரது தந்தை தினியான்தேவ் வான்கடேவும் இந்து மதத்தைத் துறந்து முறையாக இஸ்லாம் மதத்திற்கு மாறியது நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. வான்கடே மற்றும் அவரது மாமனார் மஹர்-37 என்ற பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வான்கடேவின் சாதிக்கோரிக்கை மற்றும் சாதிச்சான்றிதழின் மதம் தொடர்பாக நவாப் மாலிக் மற்றும் பலர் தாக்கல் செய்த புகார்கள் ஆதாரமற்றவை எனவும், மனுவில் உள்ள புகார்கள் உண்மை இல்லாததால் அவை நிராகரிக்கப்படுவதாகவும் உத்தரவில் கூறப்பட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டு மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மீது சோதனைகளை செய்தபோது வான்கடே பெயர் அதிகம் பேசப்பட்டது. மேலும் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் 19 பேரை போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்குழு கைது செய்தபோது வான்கடே அக்குழுவின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நொய்டா இரட்டைக்கோபுரங்களை இடிக்க வெடிமருந்து தயார்