வாடகை, குத்தகை முறைகளில் புதிய சட்டங்களை கொண்டு வரவும், பொருத்தமான முறையில் திருத்தங்கள் கொண்டு வரவும், மாதிரி வாடகை சட்டம் உருவாக்கப்பட்டது. இதனை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்ப பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் அமைச்சரவை இன்று (ஜூன் 2) ஒப்புதல் அளித்துள்ளது.
பல நாடுகள், அமைப்புகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும் ஒன்றிய அரசின் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்த மாதிரி வாடகை குத்தகை சட்டம், நாட்டில் துடிப்பான, நிலையான, அனைத்தும் உள்ளடக்கிய வாடகை வீடு சந்தையை உருவாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது.
காலியாக இருக்கும் வீடுகளை எல்லாம், வாடகைக்கு விட, இந்த மாதிரி வாடகை சட்டம் உதவும். வாடகை வீடுகளை, வணிகமாக நடத்துவதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை இந்த சட்டம் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வீடு பற்றாக்குறை பிரச்னை நீங்கும்.
கனிம வளத்துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அனுமதி
கனிம வளத்துறையில் இந்தியா- அர்ஜென்டினா ஆகியவை ஒத்துழைப்புடன் செயல்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இத்துறையில் நிறுவன வழிமுறையை ஏற்படுத்தும். லித்தியம் எடுப்பது உள்பட கனிமவள ஆராய்ச்சி, மேம்பாட்டை ஊக்குவிப்பதுதான் இதன் நோக்கம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களைப் பகிர்ந்து இரு நாடுகளும் பயனடைய இது உதவும். கனிம நடவடிக்கைகளில் முதலீட்டையும் அதிகரிக்கும்.
நகர்ப்புற வளர்ச்சி துறையில் ஜப்பானுடன் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல்
நிலையான நகர்ப்புற வளர்ச்சியில் மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம், ஜப்பான் அரசின் நிலம், கட்டமைப்பு, போக்குவரத்து, சுற்றுலாத்துறை அமைச்சகத்துடன் ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கும் ஒன்றிய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நகர்ப்புற வளர்ச்சியில் இருதரப்பு இடையே ஏற்கனவே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மாற்றாக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது.
இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம், இந்தியா-ஜப்பான் இடையே நிலையான நகர்ப்புற வளர்ச்சியில் நீண்டகால ஒத்துழைப்பை மேம்படுத்தும். இந்த ஒப்பந்தம் ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்குதல் உட்பட நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-மாலத்தீவு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
நிலையான நகர்ப்புற வளர்ச்சி துறையில், மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம், மாலத்தீவு வீட்டு வசதி அமைச்சகம் இடையே கடந்த பிப்ரவரி மாதம் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழுவில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதன் மூலம் இத்துறையில் இரு நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஸ்மார்ட் நகரங்கள் அமைப்பது உட்பட நகர்ப்புற வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும். மலிவான வீடுகள் உருவாகும். நகர்ப்புறங்களில் விரைவான பொதுப்போக்குவரத்து வசதிகள் உருவாகும். இந்த ஒப்பந்தத்துக்கு ஒன்றிய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
உறுப்பு நாடுகள் இடையே ஊடகத்துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான ஒப்பந்தம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் இடையே ஊடகத்துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான ஒப்பந்தம் கடந்த 2019 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. இதற்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று பின்ஏற்பு ஒப்புதல் வழங்கியது.
இந்த ஒப்பந்தம் ஊடகத்துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தும் சிறந்த நடைமுறைகள், ஊடகத்துறையில் உள்ள புதுமைகள், தகவல்கள் மற்றும் செய்திகள் ஆகியவற்றை உறுப்பு நாடுகள் இடையே பகிர்ந்து கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வாய்ப்பளிக்கும். உறுப்பு நாடுகளின் பத்திரிகையாளர்கள் ஊடகத்துறை தொடர்பான கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்தி தங்களின் ஒத்துழைப்பையும், தொழில் அனுபவத்தையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு: இரண்டு நாள்களில் முடிவு