டெல்லி: குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று (டிச.8) வெளியிடப்பட்ட நிலையில், 5 மாநிலங்களின் இடைத் தேர்தல் முடிவுகளும் நேற்று வெளியாகின. உத்தரப்பிரதேச மாநில மயின்பூர் மக்களவை தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரகுராஜ் சிங் ஷக்யாவை தோற்கடித்தார்.
முன்னதாக சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாம் சிங் யாதவ் மறைந்ததையடுத்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் டிம்பிள் 2 லட்சத்து 40 ஆயிரத்து 322 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக ஆளும் மாநிலமான உ.பி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி - ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி) கூட்டணி அதன் வெற்றியை நிரூபித்துள்ளது. மேலும் இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், பகுஜன் சமாஜ்வதி கட்சியும் போட்டியிடவில்லை.
இதனைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியின் கோட்டைகளாக கருதப்படும் அசம்கர் மற்றும் ராம்பூர் மக்களவை இடைத்தேர்தலில் அக்கட்சி தோல்விகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி மற்றும் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரியா லோக் தளம் ஆகியவைகளுக்கு மெயின்புரி நாடாளுமன்றம் மற்றும் ராம்பூர் மற்றும் கட்டௌலி சட்டமன்றம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் முக்கியமானதாக கருதப்பட்டது.
பிகாரில் பாஜக வெற்றி: பிகாரின் குர்ஹானி சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் கேதார் பிரசாத் குப்தா அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜேடி(யு)வின் மனோஜ் சிங் குஷ்வாஹாவை 3 ஆயிரத்து 645 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முன்னதாக பதவியில் இருந்த ஆர்ஜேடி எம்எல்ஏ அனில் குமார் சஹானி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
கட்டெளலியில் ராஷ்டிரிய லோக் தளம் வெற்றி: எஸ்பி(சமாஜ்வாதி கட்சி) கூட்டணியான ராஷ்டிரிய லோக் தளம் சார்பாக கட்டெளலி இடைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் மதன் பையா அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜ்குமாரி சாயினியை 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் மதன் பையா 97 ஆயிரத்து 71 வாக்குகளும், சாயினி 74,996 வாக்குகளும் பெற்றனர்.
சாயினி பாஜக முன்னாள் எம்எல்ஏ விக்ரம் சிங்கின் மனைவி ஆவார். அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த முசாபர்நகர் கலவர வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து மாநில சட்டமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அத்தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் உ.பியின் மற்றொரு சட்டமன்ற தொகுதியான ராம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஆகாஷ் சக்சேனா அவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ்பி வேட்பாளர் அசீம் ராஜாவை 33,702 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சிறுபான்மையினர் அதிகம் இருக்கும் இந்த தொகுதியில் இருந்த எஸ்பி எம்எல்ஏ வெறுப்பு பேச்சு காரணமாக சிறை தண்டனை வழங்கப்பட்டதால் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி: ராஜஸ்தான் சர்தர்ஷாஹர் தொகுதி இடத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அனில் குமார் சர்மா 26,852 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஒட்டு மொத்தமாக அனில் 2,89,843 வாக்குகள் பெற்றார். முன்னதாக இத்தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பன்வார் லால் கடந்த அக்.9 அன்று இறந்ததையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஹாட்ரிக் : பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட பானுபிரதாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதன் வெற்றியைப் பதிவு செய்தது. காங்கிரஸ் வேட்பாளர் சாவித்ரி மாண்டவி அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பிரமானந்த் நேதத்தை 21 ஆயிரத்து 171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மாண்டவி 65,479 வாக்குகளும், பாஜகவின் நேதம் 44,308 வாக்குகளும் பெற்றனர். சுயேச்சை வேட்பாளர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அக்பர் ராம் கோர்ரம் 23,417 வாக்குகள் பெற்றார்.
ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் வெற்றி: ஒடிசா மாநிலம் பத்மாபூர் தொகுதியில் ஆளும் கட்சியான BJD (பிஜு ஜனதா தளம்) வேட்பாளர் பர்சா சிங் பரிஹா அவரடி எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரதீப் புரோகித்தை 42 ஆயிரத்து 679 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் இந்த வெற்றிக்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் அயராத உழைப்பு காரணம் என வெற்றி பெற்ற வேட்பாளர் பர்சா தெரிவித்தார்.
மேலும் பர்சா 1 லட்சத்து 20 ஆயிரத்து 807 வாக்குகள் பெற்றிருந்தார். பாஜக வேட்பாளரான புரோகித் 78 ஆயிரத்து 128 வாக்குகள் பெற்றிருந்தார். பிஜூ ஜனதா தள எம்எல்ஏ பிஜய் ரஞ்சன் சிங் பரிஹா கடந்த அக்டோபர் மாதம் உயிரிழந்ததையடுத்து இந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.
இதையும் படிங்க:இமாச்சல் முதலமைச்சர் தேர்வு - காங். தலைவர் கார்கே சூசகம்!