மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து கங்கவாலிக்கு 31 பயணிகளுடன் சிந்தாமணி டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்து ஒன்று நேற்று (டிசம்பர் 30) புறப்பட்டது.
இந்தப் பேருந்து இன்று அதிகாலை 4 மணியளவில் ராய்காட் மாவட்டம் காஷெடி காட் மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலத்பூர் காவல் துறையினர் விபத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
இதில் பேருந்தில் பயணம் செய்த சாய் ரானே என்ற எட்டு வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 15 பேர் மீட்கப்பட்டு போலத்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தபோது ஒரு மரத்தில் சிக்கிக்கொண்டதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது என உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன.