ஹைதராபாத்: சட்டமேதை அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி, ஹைதராபாத் ஹூசைன் நகரில் 125 அடி உயரத்துக்கு நிறுவப்பட்டுள்ள அவரது உருவச்சிலையை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் கலந்து கொண்டார்.
விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் சந்திரசேகர ராவ், "மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி (BRS) கட்சிக்கு, நல்ல வரவேற்பு உள்ளது. பட்டியலினத்தை சேர்ந்த குடும்பங்கள் சிறு தொழில் செய்து பிழைப்பதற்காக தெலங்கானாவில் 2021ம் ஆண்டு தலித் பண்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பட்டியல் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினருக்கும் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. இப்பணத்தை பயனாளிகள் திருப்பித்தர வேண்டியதில்லை.
2024ம் ஆண்டு மத்தியில் அமையப் போவது பிஆர்எஸ் ஆட்சி தான். நமது எதிரிகள் சிலர் வயிற்றெரிச்சலில் உள்ளனர். அரசியல் சாசனம் கொண்டு வரப்பட்டு 70 ஆண்டுகள் ஆகியும், பட்டியல் சமூக மக்கள் இன்னும் வறுமையில் வாடுகின்றனர். இது வெட்கப்பட வேண்டிய விஷயம். கடந்த 10 ஆண்டு காலத்தில் எனது தலைமையிலான அரசு பட்டியல் சமூக மக்களுக்காக ரூ.1.25 லட்சம் கோடியை செலவு செய்துள்ளது. ஆனால் முந்தைய அரசோ, ரூ.16,000 கோடியை மட்டுமே செலவு செய்திருக்கிறது.
நடப்பு நிதியாண்டில் 1.25 லட்சம் பட்டியல் சமூக குடும்பங்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. பிஆர்எஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும் 25 லட்சம் குடும்பங்களுக்கு தலித் பண்டு திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படும். அம்பேத்கர் விரும்பியதை போல் அனைவருக்கு சமமான சமூகம் அமைவதை நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயத்தால் தொடரும் அவலம் - பீகாரில் 8 பேர் பலி!