டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகவும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டதையடுத்து அவர் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, மல்யுத்த சம்மேளனத்திற்கான தேர்தலை அறிவித்து விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்த தேர்தல் கடந்த டிச.21ஆம் தேதி நடைபெற்ற நிலையில், சம்மேளனத்தின் தலைவராக சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், சஞ்சய் சிங் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, பிரிஜ் பூஷனின் நெருங்கிய ஆதரவாளர்களுள் ஒருவர் என மல்யுத்த வீரர்களான ஒலிம்பிக் பதக்க வென்ற சாக்ஸி மாலிக், பஜ்ரங் புனியா அவர்களது அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த நிலையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சஞ்சய் சிங்கை தேசிய அளவிலான U-15 மற்றும் U-20 வயது உடையவர்களுக்கு இடையே நடைபெறவிருந்த போட்டி அறிவிப்பில் விதிகளை மீறியதாகக் கூறப்பட்டு அவரை இடைநீக்கம் செய்து இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, பாஜக கட்சியின் தேசிய தலைவரான ஜே.பி.நட்டாவின் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரிஜ் பூஷன் கூறியதாவது, "இனி மல்யுத்த கூட்டமைப்புக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர்கள் தான் இனி முடிவுகளைத் தீர்மானிப்பார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையடுத்து எனக்கு இதைத் தவிர்த்து பல்வேறு பொறுப்புகள் உண்டு.
சம்மேளனத்தின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட சஞ்சய் சிங் எனது உறவினர் இல்லை. மேலும், முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த U-15 மற்றும் U-20 வயது உடையவர்களுக்கு இடையே தேசிய அளவிலான போட்டிகள் உத்திரபிரதேசம் நந்திநகரில் நடைபெறும் என 25 கூட்டமைப்புகளாலும் பேச்சு மற்றும் எழுத்து வடிவில் தீர்மானிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அறிவிப்பில் விதிகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு சஞ்சய் சிங்-கை இடைநீக்கம் செய்து இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, பழைய கூட்டமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில், வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற இயலாது என்று முடிவு செய்யப்பட்ட நிலையில், வீரர் மற்றும் வீராங்கனைகளின் ஒரு வருட கால பயிற்சி வீணாகிவிடும் என்பதற்காக உத்திரபிரதேசம் நந்திநகரில் போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இனி நடக்கவிருக்கும் அனைத்தையும் சம்மேளனமே பார்த்துக்கொள்ளும். எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதிய இந்திய மல்யுத்த சம்மேளனம் சஸ்பெண்ட்.. விளையாட்டுத்துறை அமைச்சகம் கூறுவது என்ன?