ஐதராபாத் : அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் தயாராகி வரும் படம், ஜவான். படம் தயாராகி வரும் போதே பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.
பிரியாமணி, சானியா மல்கோத்ரா, யோகிபாபு உள்படப் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேலும் இந்தப் படத்தில் சஞ்சய் தத், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் கவுரவ வேடத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஜவான் படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் ஷாருக்கான் இரண்டு வேடத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அப்பா - மகன் என இரு வேறு கதாபாத்திரங்களில் நடிகர் ஷாருக்கான் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. வரும் ஜூன் 2-ம் தேதி ஜவான் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது.
இந்நிலையில், படம் குறித்த மற்றொரு கிசுகிசு வெளியாகி கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் பின்னணியில், இந்தப் படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. பேரரசு படத்தை இன்ஸ்பிரேசனாக கொண்டு, இந்தப் படத்தை அட்லீ இயக்கி இருப்பதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் அப்பா - மகனாக நடித்த ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் மையக் கதையைக் கொண்டு இந்தப் படம் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப ஒரு கைதியின் டைரி படத்தை திரித்து ஜவான் படத்தை அட்லீ உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - ரஜினிகாந்த் வாக்கு செலுத்தினார்!