மத்திய டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே சிறிய அளவிலான குண்டுவெடிப்பு இன்று நிகழ்ந்தது. குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட ராணுவ வீரர்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்வு நடைபெற்ற பகுதிக்கு அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
பாசறைக்கு திரும்பும் நிகழ்வை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அரசின் மூத்த அலுவலர்கள் ஆகியோர் விஜய் சவுக்குக்கு வந்திருந்தனர். அங்கிருந்து 1.4 கிமீ தொலைவில் ஐஇடி குண்டு வெடித்தது. நல்வாய்ப்பாக, எந்தவித உயர் சேதமும் பொருள் சேதமும் ஏற்படவில்லை.
குண்டு வெடித்ததை தொடர்ந்து, நிலையான இயக்க நடைமுறைகளின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், முக்கிய பகுதிகள், அரசு கட்டடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து காலல்துறை கூறுகையில், "இஸ்ரேல் தூதரகம் அருகே ஜிண்டால் ரெசிடன்சிக்கு வெளியே உள்ள நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பையில் ஐஇடி குண்டு இருந்தது
குண்டு வெடித்ததை தொடர்ந்து, தூதரகம் அமைந்துள்ள அப்துல் கலாம் சாலை முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் எடுக்கப்பட்டது. மூத்த காவல்துறை அலுவலர்கள், சிறப்பு காவல் படை, புலனாய்வு அமைப்பை சேர்ந்த அலுலவர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி காவல் ஆணையர், புலனாய்வு துறையின் தலைவர்கள் ஆகியோர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.