டெல்லி: ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து வெளியான முடிவின்படி, தெலங்கானாவில் காங்கிரஸ், மிசோரமில் சோரம் மக்கள் இயக்கம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றது. இவற்றில் தெலங்கானாவில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார்.
அதேபோல், மிசோரமில் லால்துஹோமா முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். ஆனால், பாஜக வென்ற மூன்று மாநிலங்களிலும் இதுவரை முதலமைச்சர் தேர்வு செய்யப்படவில்லை. அதிலும், தேர்தலுக்கு முன்பும், முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, கடந்த 6 நாட்களாக மூன்று மாநில பாஜக பிரமுகர்கள் டெல்லியில் வலம் வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், இன்று (டிச.10) ராஜஸ்தானில் பாஜகவின் சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக, மூன்று மாநிலங்களிலும் முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட பாஜக பார்வையாளர்களான மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலங்களவை உறுப்பினர் சரோஜ் பாண்டே மற்றும் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்தேகவ் ஆகியோர் நேற்று (டிச.9) மாலை ஜெய்ப்பூர் வந்தடைந்தனர்.
இதனையடுத்து, இன்று நடைபெறும் கூட்டத்தில், மூன்று மாநில முதலமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, ராஜஸ்தானில் பெரும்பாலான வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் முதலமைச்சர் வசுந்தர ராஜேவை முதலமைச்சராக்க பரிந்துரைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது மட்டுமல்லாமல், ராஜஸ்தான் முதலமைச்சர் பரிந்துரை பட்டியலில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மூத்த பாஜக தலைவர் ஓம் மதூர், மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங், அர்ஜுன் மேக்வால், அஷ்வினி வைஷ்ணவ், தியா குமாரி, பாபா பாலக் நாத் மற்றும் அம்மாநில பாஜக தலைவர் சிபி ஜோஷி ஆகியோரின் பெயர்களும் உள்ளன.
இதையும் படிங்க: தெலங்கானா பதவி ஏற்பின் போது அரங்கை அலறவிட்ட சீதாக்கா? யார் இவர்?