கொல்கத்தா: மாநில அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் 7ஆவது ஊதியக் குழு நிறைவேற்றப்படும், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக வருகிற 27ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக ’சோனார் பங்களா’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.21) வெளியிட்டது. இதனை உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.
இந்தத் தேர்தல் அறிக்கையில், “புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு முதல் அமைச்சரவை கூடி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம்” என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- விவசாயத் திட்டம்: பிரதம மந்திரி கிஸான் திட்டத்தின்கீழ் மாநிலத்தின் 75 லட்சம் விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மேலும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதில் 6 ஆயிரத்தை மத்திய அரசும், மீதமுள்ள தொகையை மாநில அரசும் வழங்கும்.
- மீனவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் காப்பீடு: விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, பாதுகாக்க 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும்.
- அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு இடஒதுக்கீடு: மாநில அரசு ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக் குழுவின்படி சம்பளம் வழங்கப்படும். அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும்.
- மாணவிகளுக்கு இலவச பயண அட்டை: பெண்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் பள்ளி முதல் முதுகலை படிப்பு வரை பயிலும் பெண்களுக்கு இலவச பேருந்து அட்டை பயணச்சீட்டு வழங்கப்படும்.
- எய்ம்ஸ் மருத்துவமனை: வடக்கு வங்காளத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். ஜங்கிள் மஹால் மற்றும் புறநகர் பகுதிகளில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுத்தமான குடிநீர் மற்றும் கழிவறை கட்டி கொடுக்கப்படும்.
- துர்கா, சரஸ்வதி பூஜைகளுக்கு அனுமதி: மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் துர்கா பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட அனுமதி கோரி மக்கள் நீதிமன்றங்களை அணுக வேண்டாம். மத பண்டிகைகளுக்கு உடனே அனுமதி வழங்கப்படும்.
- குற்றச்சாட்டு: மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, இளைஞர்களுக்கு வேலை இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக மம்தா பானர்ஜியின் செயல்படாத அரசு வங்கத்தின் வரலாற்றை கறுப்பு பக்கங்களாக மாற்றிவிட்டது.
- ஐஐடி, ஐஐஎம் பல்கலைக்கழகங்கள் உருவாக்கம்: மாநிலத்தில் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளி கட்டமைப்புகள் தரம் உயர்த்தப்படும். ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட ஐந்து பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
8 கட்டங்களாக வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. மாநிலத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் வருகிற 27ஆம் தேதியும், இறுதி கட்ட தேர்தல் ஏப்ரல் 29ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். அஸ்ஸாம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி 26ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: அஸ்ஸாமில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்- நரேந்திர மோடி