ஷிம்லா: ஹிமாச்சலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலையொட்டி, இன்று(நவ.7) ராம்பூரில் பாஜகவின் 'ஜன் சம்பர்க் அபியான்' பரப்புரையின் ஒரு பகுதியாக சாலைப்பேரணி நடந்தது. இதில், பாஜக தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டு, பாஜக வேட்பாளர் கவுல்சிங் நேகிக்கு ஆதரவாக வாக்குசேகரித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது பேசிய அவர், "முந்தைய காங்கிரஸ் அரசு சாமானிய மக்களைத்தொடர்ந்து தவறாக வழிநடத்த முயன்றது. ஹிமாச்சலில் ஒரு குடும்பத்தின் பெயரை வைத்து ஓட்டு கேட்கும் முயற்சி நடக்கிறது. அவர்கள் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து கவலைப்படவில்லை, தங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள்.
ஹிமாச்சலில் பாஜக அறிமுகப்படுத்திய திட்டங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கும், சாமானிய மக்களின் நல்வாழ்வுக்கும் பங்களித்துள்ளன. ஹிமாச்சலில் ஜெய்ராம் தலைமையிலான அரசாங்கம், ஆயுஷ்மான் எச்எம் யோஜனா திட்டத்தின்கீழ் ஹிமாச்சல மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்கியுள்ளது. மாநிலத்தில் வளர்ச்சிக்காகவும், சுரங்கப்பாதைகளை அமைப்பதற்காகவும் நான்கு கடன்களுக்கு விண்ணப்பித்துள்ளது.
நாட்டில் உள்ள பெண்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி உஜ்வாலா யோஜனா உள்ளிட்ட திட்டங்கள் மூலம் பல வசதிகளை வழங்கினார். ஹிமாச்சல் கிரிஹானி சுவிதா யோஜனா திட்டத்தால், மாநிலம் முழுவதும் உள்ள வீடுகளில் கேஸ் அடுப்பு மூலம் உணவு சமைக்கப்படுகிறது.
பாஜக ஆட்சியில், இந்தியா செல்போன் உற்பத்தியில் இரண்டாவது இடத்தையும், எஃகு உற்பத்தியில் இரண்டாவது இடத்தையும், சூரிய ஆற்றல் உற்பத்தியில் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரால் உலகமே நிலைகுலைந்து கிடந்தபோது, இந்தியா பிரிட்டனை மிஞ்சி உலகளவில் பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது" என்று கூறினார்.
இதையும் படிங்க:"இலவசம் அல்ல, அதிகாரமளித்தல்" - ஜேபி நட்டா விளக்கம்