அண்மையில் நடந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி 243 இடங்களில் 126 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.
இந்நிலையில், நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க சபாநாயகர் தேர்தலில் தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு தன்னிடம் லாலு பிரசாத் யாதவ் தொலைபேசி மூலம் பேசியதாக பாஜக எம்எல்ஏ லாலன் பாஸ்வான் குற்றஞ்சாட்டினார்.
இதுதொடர்பான ஆடியோ பதிவை பிகார் முன்னாள் முதலமைச்சர் சுஷில் குமார் மோடி தனது ட்விட்டரில் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "அமைச்சர் பதவி வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி தேசிய ஜனநாயக கூட்டணி சட்டப்பேரவை உறுப்பினர்களை லாலு பிரசாத் விலைக்கு வாங்க நினைக்கிறார். சிறையில் இருந்துகொண்டு இதுபோன்ற கேடுகெட்ட வேலைகளைச் செய்யாதீர்கள்" என சுஷில் குமார் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து ஈடிவி பாரத்திற்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் லாலன் பாஸ்வான் அளித்த பேட்டியில், "எனக்குச் சட்டத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் முழு நம்பிக்கை உள்ளது. சிறையில் இருந்துகொண்டு ஆர்ஜேடி கட்சித் தலைவரின் வேட்டையாடும் முயற்சி ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் முழு வெளிச்சம் பெறும்.
இது தொடர்பாக விஜிலென்ஸ் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில், யாதவ் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு, நான்கு கால்நடை தீவன ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிவர் புயல் பாதிப்பு: கடலூரில் முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு!