மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்பான நகரப் பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. மொத்தம், 106 நகரப் பஞ்சாயத்துகளில் உள்ள 1,802 இடங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
1,802 இடங்களில் 416 இடங்களை கைப்பற்றி பாஜக முதலிடத்தைப் பெற்றது. அதற்கு அடுத்து தேசியவாத காங்கிரஸ் 378 இடங்களும், சிவசேனா 301 இடங்களும், காங்கிரஸ் 297 இடங்களும் வென்றன.
இந்த மூன்று கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணி மொத்தம் 976 இடங்களை கைப்பற்றியுள்ளதால், 106 நகரப்பஞ்சாயத்துகளில் 57 இடங்களை இந்தக் கூட்டணியே வென்றுள்ளது. பாஜக 24 நகரப் பஞ்சாயத்துகளை வென்றது.
தேர்தல் முடிவுகள் குறித்து மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் கூறுகையில், "மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக பாஜக இருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. சுமார் 26 மாதங்களாக பாஜக ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதிலும், எங்கள் கட்சியால் மக்களுக்கு நன்மை செய்து வெற்றி காண முடியும் என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன" என்றார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சியில் மாநில முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே உள்ளார்.
இதையும் படிங்க: HOROSCOPE: ஜனவரி 20 ராசிபலன் - இன்று நல்லது நடக்குமா?