கர்நாடகா: தக்ஷிண கன்னடா மாவட்டத்தின் பெல்லாரே அருகே உள்ள நெட்டாறு கிராமத்தில் நேற்றிரவு (ஜூலை 26) பாஜக நிர்வாகியான பிரவீன் (32) என்பவரை, அடையாளம் தெரியாத இரண்டு பேர் கூர்மையான ஆயுதங்களை கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில், படுகாயமடைந்த பிரவீன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம், நேற்றிரவு 9 மணியளவில் நடந்துள்ளது. கோழிக்கடை வைத்து நடத்திய பிரவீன் பாஜகவின் இளைஞரணியில் நிர்வாகியாக செயல்பட்டு வந்துள்ளார்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட பெல்லாரே காவல் துறையினர், கொலை செய்த இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையின் பின்னணி என்ன?, கொலை செய்தவர்கள் யார்? போன்ற தகவல் கிடைக்கவில்லை என்பதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில்,"கொலைக்கு காரணமானவர்கள் விரைவில் கைதுசெய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். பிரவீனின் ஆன்மா சாந்தி அடையட்டும். இந்த வலியை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்திற்கு கடவுள் கொடுக்கட்டும் என வேண்டிக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பார்ட்டியில் ஈடுபட்ட மாணவர்களை வெளியேற்றிய பஜ்ரங் தள் அமைப்பினர் - சம்பவ இடத்தில் மங்களூரு காவல் ஆணையர் விசாரணை!