டெல்லி: வேளாண் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்பில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கிடையில், விவசாயிகள் “டெல்லி சலோ” என்ற முழக்கத்துடன் டெல்லி நோக்கி கிளம்பினர்.
இந்நிலையில், தண்ணீர் பீய்ச்சி அடித்தும், தடுப்புகள் அமைத்தும் விவசாயிகளை காவலர்கள் தடுத்துவருகின்றனர். நாடு முழுக்க விவசாயிகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் இந்தப் போராட்டம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தூண்டுதல் காரணமாக நடைபெறுவதாக பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஜய் சம்பலா கூறியுள்ளார்.
அவர் ஈடிவி பாரத்திடம் பேசுகையில், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளை அழிக்க கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்று காங்கிரஸ், சிரோன்மணி அகாலிதளம் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் விவசாயிகளை நம்பவைத்து தூண்டுகின்றனர்.
விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் மத்திய அரசுடன் பேச வேண்டும்” என்றார். பஞ்சாப் விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதாவை திருத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், “வேளாண் சட்டம் விவசாய பொருள்களுக்கு அடிப்படை ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்கிறது” என்று விஜய் சம்பலா கூறினார்.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: விவசாயிகளை ஒடுக்க 144 தடை உத்தரவு!