உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது ராஜ்புரா கிராமம். இங்கிருக்கும் மக்கள் மின் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் தவித்துவருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தின்கீழ் வரும் ராம்புரில் மின் கம்பங்களையும், மின்மாற்றிகளையும் மின் துறை அலுவலர்கள் எழுப்பியுள்ளனர். இருப்பினும், அவை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளன.
இதற்கிடையே, உத்தரப் பிரதேச அரசு அளிக்கும் மின் விநியோகம் ராஜ்புரா கிராமத்தைச் சென்றடையவில்லை என்றும் உத்தரகாண்ட் அரசின் மூலமாகவே மின்வசதி கிடைப்பதாக அக்கிராம மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து உள்ளூர்வாசி சுக்விந்தர் சிங் கூறுகையில், "இங்கிருக்கும் மின் கம்பங்களையும், மின்மாற்றிகளையும் உத்தரப் பிரதேச அரசுதான் எழுப்பியுள்ளது. ஆனால், உத்தரகாண்ட் அரசுதான் மின் விநியோகம் வழங்கியுள்ளது. மின் இணைப்பை வழங்காத உத்தரப் பிரதேச அரசு மின் கட்டணத்தைக் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது" என்றார்.
இது குறித்து ராம்புர் மின் துறையின் நிர்வாகப் பொறியாளர் இம்ரான் கான் கூறுகையில், "இதைப் பற்றி மண்டலத் துணை வட்டாட்சியரிடம் பேசியுள்ளேன். இச்சம்பவம் குறித்து விசாரணை செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார். விசாரணையின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.